காதல் வாகனம்....!


காலம் கடந்தும் மறக்க முடியாத சில பந்தங்கள்!

எழுபதுகளில் என் போன்றோர் கனவு ஒரு சைக்கிள் அளவு மட்டுமே. பெட்ரோல் வண்டியை, கனவு கூடக் காண முடியாது. 

அன்றைய தினங்களில் ஒரு சிறு நகரத்தில் பத்து டூ வீலர்களைப் பார்ப்பது என்பதே அரிது. கிராமப் புறங்களில் பெரு விவசாயிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் அனைவரும் என்ஃபீல்ட் புல்லட் 350 சிசி வண்டி வைத்திருப்பார்கள். அரசு இஞ்சினியர்கள் பெரும்பாலும், ஜாவா, எஸ்டி வண்டியே வைத்திருப்பார்கள். எடை கூடுதல் காரணமாகவும் மைலேஜ் (30 கிமி/லிட்டர்) ராஜ்தூத் வாங்கினார்கள். ஆனால் பாபி படம் வந்ததும் ரிஷிகபூர் ஓட்டிய ராஜ்தூத் சின்ன சக்கர பைக் பிரபலமாகிப் போனது.

பல அரசு அதிகாரிகள், தனியார் கம்பெனி மேலாளர்கள் ஆண்மையான பைக் மீது காதல் கொள்ளாமல் பெண்மையான ஸ்கூட்டரை வைத்திருந்தார்கள். அதில் முந்தைய தலைமுறை லாம்ப்ரெட்டா, லேம்பி, வெஸ்பா அடக்கம். ஆனால் பஜாஜ் மார்க்கெட்டில் நுழைந்து, வெஸ்பா இத்தாலியுடனான உறவை முறித்து, சுயமாக லாம்பி போல பெல்ட் இல்லாத நேரடி வீல் ட்ரைவான தங்களின் ஸ்கூட்டரை இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தியபோது சந்தையே அதிர்ந்தது. பஜாஜின் சேதக், விஜய் சூப்பர், பிரியா, கப், மாடல்கள் நகரெங்கும் பவனி வந்தன. பைக்குகள் வண்ணம் அதிகம் இருக்கவில்லை. பாபி ஸ்கூட்டர் சிகப்பு, கருப்பு, நீல வண்ணத்திலும், புல்லட் மிலிடெரி பச்சை, கறுப்பு, மெரூன் கலரிலும், ஜாவா மெரூன், கருப்பு கலரிலும்,ராஜ்தூத் கருப்பு, நீலக் கலரிலும் வெளியாயின.

ஆனால் பஜாஜ் எல்லா நிறங்களிலும் வெளியிட்டு தன் மார்க்கெட் பசியைத் தீர்த்துக் கொண்டது. 

இதை விட அதிர்ச்சி தரும் செயல் பஜாஜ் தனது சேதக் மாடல் ஸ்கூட்டருக்கு ப்ரிமியம் வைத்து விற்றதுதான். ஐநூறு ரூபாய் கட்டி விட்டு இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். ஆனால் ராணுவத்தினர் மற்றும் என்ஆர்ஐ (டாலர் பணம்) களுக்கு மட்டும் உடனடி டெலிவரி தந்தனர். இதனால் ஸ்கூட்டர் வாங்க நினைத்தவர்கள் வேறு வழியின்றி பஜாஜின் விஜய் சூப்பர், பிரியா மாடல்களை தலை எழுத்தே என வாங்க வேண்டி வந்தது. காரணம் இதற்கு ரீசேல் வேல்யு இல்லை என்பதால். 

1982 ஆம் ஆண்டு, முதன் முதலில், சைக்கிள் விற்பவர்கள் அதே உரிமத்தில் பைக் தயாரிக்கலாம் என்ற ஒரு அற்புதமான சட்டத் திருத்தத்தால் ஹீரோ சைக்கிள் கம்பெனியும், டிவிஎஸ் கம்பெனியும் முந்திக் கொண்டன. ஹீரோ சைக்கிள் கம்பெனி ஹோண்டாவுடன் கூட்டும், டிவிஎஸ் சுசுகியுடன் தொழில் நுட்பக் கூட்டு வைத்தன. இரண்டு கம்பெனிகளும் போட்டி போட்டு ஆரம்ப கால தயாரிப்பில் ஜப்பானிலிருந்து அனைத்து பாகங்களையும் இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்தனர். ஹீரோ தனது ஆரம்பத்தை டெல்லியிலும், டிவிஎஸ் ஓசூரிலும் தங்கள் கம்பெனியை தொடங்கி விட்டனர்.

இந்த இரண்டு பேரில் யார் முதலில் வண்டியை வெளியிடுவார்கள் என்ற பெரும் போட்டி இருந்தது. அன்றைய உதவி ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் ஆசியோடு 1982 ஆம் ஆண்டு டிவிஎஸ் தனது 'இண்ட் சுசுகி' வண்டியை முதலில் சந்தைக்குக் கொண்டு வந்து வெள்ளோட்டம் விட்டது. 110 சிசி என்றாலும் விளம்பரங்களில் 100 சிசி வண்டி என்றே வெளிப்படுத்தியது. சுசுகி வண்டிகளை ஒரு கூரையின் (நிஜமாகவே கூரைதான்) கீழ் ஓசூரில் டிவிஎஸ் அசெம்ப்ளி செய்தது. சப்பை மூக்கு ஜப்பானியர்களை சுமந்த கார்கள் பெங்களூருக்கும் ஓசூருக்கும் இடையே பறந்தபடி இருந்தன.

ஹீரோவிற்கு இது ஒரு டஃப் ஃபைட். என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியாமல் ஹோண்டா வண்டி எப்போது வரும் என்று இண்ட் சுசுகி வாங்காமல் பலர் காத்திருந்த நேரத்தில் ஹோண்டா தனது தயாரிப்பை 1984 இல் வெளியிடுவதாக அறிவித்து அதிர்ச்சி தந்தனர். இண்ட் சுசுகி பைக் வரும் முன்னரே டிவிஎஸ்50 சந்தையில் நல்ல மதிப்பில் இருந்ததால், இண்ட் சுசுகியை மக்கள் வாங்கத் தொடங்கினர். வேறு எந்த வண்டியுடனும. ஒப்பு நோக்க இயலாமை காரணமாக 1982 முதல் 1984 வரை டிவிஎஸ் 100 சிசி வண்டியிலும் 50 சிசி வண்டியிலும் ஏக போக ராஜாவாகி தனது மார்க்கெட்டை வட இந்தியா வரை கொண்டு சென்றது.

பொறுத்திருந்த ஹீரோ கம்பெனி, இடைப் பட்ட காலத்தில் தனது விளம்பரங்களால் மக்களை அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்தது. இது செய்த ஒரே விளம்பரம் 'ஹீரோ ஹோண்டா 4 ஸ்ட்ரோக் எஞ்சின்... மைலேஜ் லிட்டருக்கு 60 கிமி!' என்பது மட்டுமே. 

சுசுகி இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின். 40 கிமி வரை மைலேஜ் கிடைக்கும். நாலு மற்றும் இரண்டு ஸ்ட்ரோக் மாடல்களை கம்பேர் செய்தால், இரண்டு ஸ்ட்ரோக் வண்டி அதிக பிக் அப் சக்தி, வேகமாக செல்லுதல் மற்றும் குறைந்த பாகங்கள், சர்வீஸ் செலவு குறைவு.

இத்தனை சௌகர்யங்கள் இருந்தும் 1984 இல் ஹோண்டா CD100 வெளியானபோது மக்கள் ஆலாகப் பறந்து அதை வாங்கினார்கள். ஒரே காரணம் மைலேஜ்... மைலேஜ்... மைலேஜ். தினசரி பெட்ரோல் செலவு குறைவு. இந்த பலமான விஷயத்தை முதலில் கோட்டை விட்ட டிவிஎஸ் பின்னர் தங்கள் அனைத்து மாடல்களையும் 4 ஸ்ட்ரோக்காக மாற்றிக் கொண்டது தனிக் கதை!

பின்னர் ஹோண்டா வண்டிகள் இ

ந்தியாவையே வென்று வாகை சூடியது ஒரு சரித்திர நிகழ்வு!.

இடையே மற்றொரு ஜப்பான் ஜாம்பவானின் யமாஹா ஆர்எக்ஸ் 100/130 இளைஞர்களை உலுக்கி எடுத்தது. இளைஞர்கள் அதன் சைலன்சரை எடுத்து விட்டு வீதிகளில் அலப்பரை செய்தது மறக்க இயலாது. மிக அதிக ரீசேல் வேல்யு உள்ள வண்டி இன்றளவும் யமாஹா RX 100 தான். 1990 களில் ₹ 35000 க்கு வாங்கிய இந்த வண்டியின் இன்றைய சந்தை விலை ₹ 1 லட்சம். யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல.

1960 முதல் 1980 வரை சந்தையில் இருந்த சிறிய ரக பெட்ரோல் வண்டிகள் பற்றியும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். 

முதலில் வருவது சுவேகா மொபெட். காலால் சுற்றி ஸ்டார்ட் செய்யப்படும் வண்டி. 50 சிசி வண்டி... மிகப் பிரபலமாக நடுத்தர வர்க்கத்திடம் புழங்கிய வண்டி. ஒருசில உள்ளூர் விஞ்ஞானிகள் சைக்கிளை இஞ்சின், டேங்க் வைத்து ஆல்ட்ரேஷன் செய்து பவர் சைக்கிளால் பவனி வந்தனர்.... இவர்களிடம் சாதா சைக்கிள் வைத்திருந்த அனைவரும் கேட்ட ஒரே கேள்வி "எவ்வளவு செலவாச்சுங்க?" என்பது மட்டுமே!

அடுத்து லூனா எனும் காதல் வாகனம். அதன் வடிவமைப்பிற்காகவே அதனை பலரும் விரும்பினர். குறிப்பாக கல்லூரிப் பெண்களின் காதல் வாகனம் லூனா என்றால் மிகையாகாது.

இந்த இரண்டு மாடல்களும் சுமார் இருபது வருடங்கள் மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறந்தாலும், டிவிஎஸ் 50 வண்டி 1980 இல் வெளியாகி மற்றவர்களின் மார்க்கெட்டை உடைத்தெறிந்து விட்டது எனலாம். இன்று வரை 40 வருடங்களாக டிவிஎஸ் 50 வண்டியே மார்க்கெட் லீடராக இருக்கிறது.

டிவிஎஸ் 50 இன் மார்க்கெட்டைத் தகர்க்கவும், 50 சிசி, 100 சிசிக்கு இடையே ஒரு பவர் மாடலை உருவாக்கவும் பலர் முயன்று தோற்றனர்.

அதில் 60 சிசி கொண்ட ஹீரோ மெஜெஸ்டிக், 80 சிசி கொண்ட பஜாஜ் M80 (கைகளில் 3 கியர்), ஹீரோ பூச் (காலில் 3 கியர்) போன்றவை அடக்கம். பஜாஜ் எம்80 மட்டும் ஓரளவு, சுமை தூக்கும் திறனுக்காக வெற்றி பெற்றது. ஆனாலும் டிவிஎஸ் சாம்ப், தனது டிவிஎஸ் 100 சிசி வண்டிகளைக் கொண்டு பஜாஜின் கனவுகளைத் தகர்த்து விட்டது.

இடையே என்ஃபீல்ட் கம்பெனி தனது பங்காக சிலவர் ப்ளஸ் எனும் வண்டியை (கைகளில் மூன்று கியர்) ஸ்கூட்டர் பைக் இரண்டிற்கும் இடைபட்ட 50 சிசி மாடலை வெளியிட்டு கையை சுட்டுக் கொண்டது.

90களில் கைனடிக் ஹோண்டா, NVN வெஸ்பா, என ஸ்கூட்டர்கள் வந்தும் பிரபலமாகவில்லை. 

2000 இல் வெளியான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மிகப் பெரும் வெற்றி பெற்றது. இதைக் கண்ட சுசுகியும் தனது ஸ்கூட்டர் பங்களிப்பைத் தந்தாலும் அதிக வெற்றி பெற முடியவில்லை. 2005 இல் வெளியான டிவிஎஸ் பெப் போன்ற மாடல்கள் அதிகம் விற்கவில்லை. அதன் பின் டிவிஎஸ் வேகா, ஜூபிடர் போன்ற மாடல்களை வெளியிட்டும் கூட ஹோண்டா ஆக்டிவாவின் அடிமுடியைக் கூடத் தொட முடியவில்லை.

பின்னர் புதிய வெஸ்பா, யமஹா ஸ்கூட்டர்கள், பஜாஜ் பல்சர் என உலகளவாவிய மாடல்கள் இந்தியச் சாலைகளைத் தொட்டு விட்டன.

எனது வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் எனது வருமானம் முழுவதையும் இந்த வண்டிகள் மீது போட்டு மேலே எழுதிய அத்தனை வண்டிகளையும் வாங்கி, பின்னர் விற்று, ஒரு சுகானுபாவம் அடைந்திருக்கிறேன்.

ஆனாலும் விவரிக்க முடியாத ஒரு சுகம் லூனாவோடு மட்டுமே! 

வழியில் நின்று போன சேலம் சாரதா கல்லூரிப் பெண்ணின் வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்து, அந்தப் பெண்ணை பின்புறம் அமர்த்தி நாலு கிமி தள்ளி கல்லூரியில் விட்டு வந்து, எனக்குள் ஒரு காதல் மயக்கத்தை உண்டாக்கிய, பெயர்க் கூடத் தெரியாத, அந்த அழகிய இளம் பெண்ணை இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறேன்...

அந்த வண்டி ஒரு சிகப்பு நிற "லூனா....!

No comments:

Post a Comment

VOTER ID

 வோட்டர் ஐடி மிகவும் பழைமையானதாக உள்ளதா இங்கே க்ளிக் செய்து புதுமையானதாக மாற்றிக் கொள்ளவும்...      Click